Pages

Tuesday, June 26, 2012

பெரியாரைப் பேணுதல்-3


லா சா ரா பெண்ணாகவே அவதரிக்கிறார் இந்தப் 'பாற்கடல்'இல்! ஒரு தலை தீபாவளி நாட்டுப் பெண் தன்கணவனிடம் முதல் கடுதாசியில் மனம்திறந்து பேசுகிறாள்! கூட்டுக் குடும்பத்தில், அனுசரணையான,அழகான குடும்பச் சூழல், அதில் புயலின் சலனமும் உண்டு! அந்தநாளைய நடுத்தரக் குடும்பத்தைக் கண்முன்னே அப்பிடியே கொண்டுவந்துட்டார்! காவியமாய்,கவிதையாய் மிளிர்கிறது! ரசித்தேன்! பெண்சுதந்திரம் அன்பில் கரைந்து விடுகிறது! லாசாராவை என்ன பாராட்டினாலும் தகும்! அன்பு, தங்கமணி அமரர் லா.சா. ராமாமிருத்தஃதிற்கு ஒரு ரசிகையின் அஞ்சலியைப் பார்க்கிறோம். அவர் தனது ‘’பாற்கடல் ‘’ கதையில் நமது பண்பாட்டின் பொக்கிஷமான கூட்டுக் குடும்பத்தின் பெருமைகளை, வசதிகளை, பெரியோரைப் பேணவேண்டிய முறைகளை என்றும் அழியா ஓவியமாகப் பதிவு செய்துள்ளார். அதைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. வாழ்க லா.ச. ரா. புகழ்..

பெரியாரைப் பேணுதல்--2


எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தை விடச் சுருக்கவே திரும்பிவருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. “பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்.” அப்பாவும், அம்மாவும் மேலேறிச் செல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் சொர்க்க வாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மௌனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ‘ஸ்டூலை’ வைத்து மேலேறி, மாடி விளக்கின் ‘ஸ்விட்சைப்’ போடுகிறான். திடீரென மாடி வளைவில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இரு பக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய், கீழே இறங்குகிறார்கள். பிறகு பத்திரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாரித் தூக்கிக்கொண்டு போய் மனைமீது உக்காத்தி வைக்கிறார். அப்பா பிடித்துக் கொண்டிருக்க, அம்மா, பதச்சூட்டில் வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினாற்போல் தேய்க்கிறார். நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம். இது ஆராதனை இல்லாது ஏது? ஆமாம், பாட்டியின் உடல்நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான். சரிவ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்று தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்துவிட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது. பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள், நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மௌனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது; இவர் இவரா, இதுவா? கோயிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில் தான் என்ன இருக்கிறது

பெரியோரைப் பேணுதல்


வயதில் பெரியவர்களை , நடக்க்கஃகூட இயலாத அதி முதியவர்களை வீட்டிலுள்ளோர் எவ்வாறு பராமரிப்பது? இந்த நவீன காலத்தில் உடனடி பதில்—இருக்கவே இருக்கிறது முதியோர் இல்லம்.அங்கு சும்மா பார்த்துக் கொள்வார்களா?பணவசதியில்லாதவர்கள் என்ன செய்வது? நம் பெரியவர்கள் அதனால்தான் முதியவர்களைக் கவனித்துப் பராமரிப்பது நம் தலையாய கடமை என்று வழிவழியாக போதித்து , உருவேற்றி வைத்துள்ளார்கள். அதிலும் பெண்களின் பொருப்பு மிக அதிகம்.ஏனெனில் அவர்கள் தாய் மார்கள்.குடும்பத்திற்கு சேவைசெய்தே பழகியவர்கள் சேவை அவர்கள் ரத்த்தஃதில் ஊறியது இதை லா.சா.ரா. எவ்வளவு அழகாக தன் கதை மூலம் உணர்த்துகிறார். ஒரு பண்பான மருமகளின் கண்ணோட்டத்தில்----(-தன்கணவனுக்கு எழுதும் கடித்தஃதில்) “”இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா - அப்பா, பிறகு நாங்கள் - நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் இங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழிபாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளிய்யிருப்பது போல் பாட்டி மூன்றா மாடியில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றா மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக் கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா- எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம்காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது. சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள். ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவது போல், ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், ‘சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது. “என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்?” எனக்கேத் தெரிந்தால்தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிகிறது.

Thursday, June 21, 2012

ரஸனையில் பலவிதம்


அந்தப் பெரிய கம்பி ஜன்னலுக்கு ஒரு கனமான திரையைப் போட்ட மாதிரி மணிபிளாண்ட் தன்னுடைய கொடிகளைப் பரப்பியிருந்தது. இளம் பச்சையாக புதியஇலைகள் பளபளத்துக்கொண்டு, பழையவை சற்றுமங்கி ஒருதீவிரத்துடன் படர்ந்திருந்த்து. பரபரவென்று தூசிதட்டிக்கொண்டிருந்த மாலதி ஒருவினாடிநின்று ஒருஇரவுப் போதுக்குள் துருத்திக்கொண்டு நின்றிருந்த புதியகொடிகளைக் கம்பிச்சட்டத்துக்குள் நுழைத்துவிட்டாள்.. இந்த வீட்டிற்கு வந்த புதிதில் வேலைக்காரி ஒரு சின்னத்துண்டைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதை அவளே ஒரு சின்ன மண் தொட்டியில் வைத்து விட்டுப் போனாள்.நான்கு இலைகளோடுஇருந்த அந்த சின்னத்துண்டு இதுதான் என் வாசஸ்தலம் என்கிறமாதிரி எத்தனைசீக்கிரம் வேர்களைக் கிளைபரப்பி இலைகளை மேலே விரித்துக்கொண்டுவிட்டது. இப்பொழுது இந்த ஜன்னலுக்குத் திரையே அவசியமில்லாமல் போய்விட்டது..வெய்யிலுக்கு இதமான, கண்ணுக்குக் குளிர்ச்சியான திரை. வீட்டிற்கு வருபவர்கள் எல்லாரும் பார்த்து அதிசயப்படும் திரை. ‘’ ஓ! உங்க வீட்டிலே எத்தனை நன்றாக வளர்ந்திருக்கு இந்தச் செடி?’’ ‘’பணத்துக்குப் பஞ்சமில்லேன்னு அர்த்தம்?’’ அவள் சிரிப்பாள். இந்த இலையெல்லாம் உங்க கண்ணுக்குக் கரன்ஸிநோட்டாத் தெரியறதா?’’ கரன்ஸிநோட்டோ இல்லையோ,இந்தமாதிரிவளர்ந்ததானாவீட்டு சுபீட்சத்தைக்காட்டறதா சொல்லுவா...’’ சுபீட்சம்னா பணம் இருக்கிறதா அர்த்தமா? ஆமாம்.’’ அவள் விளையாட்டாகப் பேச்சை ஆரம்பித்துத் தீவிரமாகத் தலையை அசைப்பாள். ‘பணம் இருகறவாவீட்டிலேயெல்லாம் சுபீட்சம் இருக்கிறதா எனக்குத் தெரியலே..! பணத்துக்குத்தான் சுபீட்சம்னு பேரு...’’ அவள் இல்லையென்று தன்குள் சொல்லிக் கொள்வாள். எங்க அம்மாவீட்டில் ரொம்ப்பஃ பணம் இருக்குன்னு சொல்ல முடியாது. ஆனா சுபீட்சம் இருக்கிறதா எனக்குத் தோணும். எங்க மாமனார்வீட்டில் எக்கச்சக்கப் பணம். அங்கே சுபீட்சமே இல்லேன்னு தோணும்....’’ சரிதான். உனக்குன்னு ஏதாவது தோணும். எல்லாத்திலேயும் உனக்கு வித்தியாசமான பார்வை.’’ இந்தச் செடியை தினம் பார்க்கும்போதெல்லாம் இந்த சம்பாஷணைகள் நினைவுக்கு வரும். உதட்டில் புன்னகை மலரும். உங்களுக்குத்தான் வித்தியாசமான பார்வை’’ என்றுஅவள் தனக்குள் சொல்லிக் கொள்வாள். எதையும் பணத்தைக் கொண்டு அளக்கிற பார்வை. வைரத்தையும் தங்கத்தையும் மட்டும் மதிப்புப் போடும் பார்வை. வைரத்தோடு போடாதவர்களை அவளுடைய மாமியார் மதித்துப் பேசவேமாட்டாள்.. அவளுடைய அம்மாவை இன்னும் சமதையாகப் பாவித்துப் பேசுவதில்லை.... நஷ்டம் உங்களுக்குத்தான் ‘’என்று அவள் முணுமுணுத்துக் கொள்வாள்.மனிதர்களை மனிதர்களாகப் பார்கத் தெரியாதவர்கள். நீங்கள்தான் வித்தியாசமானவர்கள். நான் என் குழந்தைகளை உங்களைப்போல் நினைக்கவிடமாட்டேன். எத்தைக்கண்டாலும் காசின் நினைவு வராமல், எடைபோட்டுப் பேரம் பண்ணும் புத்திவராமல், செடியைக் கண்டாலும் அதில் பணத்தைக்காணும் பார்வைவராமல் பார்த்துக் கொள்வேன்...... அவளுக்கு ஊரும் வீடும் காம்பவுண்டு முழுவதும் நிழலைவிரித்துக்கொண்டு நின்ற அரசமரமும் ஊஞ்சலும் நினைவுக்கு வந்தன. மரத்தில் வாசம் செய்த பலநிற பட்சிகளின் நினைவு வந்தது.தோட்டத்து மூலையில் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு குழாய் உண்டு. அப்பா வேலைக்குப் போவதற்கு முன் அதில் ட்யூபைப் பொருத்தி, செடிகளின் பாத்திகளில் வைத்துவிட்டுப் போவார். அதிலிருந்து விரியும் சின்னச் சின்ன ஓடைகளில் நீர்அருந்த அரசமரத்துப் பட்சிகளெல்லாம் இறங்கிவந்து உட்காரும். எத்தனை தினுசுப் பட்சிகள்! ஊர்தெரியாத , பேர் தெரியாத பட்சிகள்—கருநீலமாய் , இளமஞ்சளாய், மயில் கழுத்தாய்...’பொளக் பொளக்’ சதக் சதக்’கென்று சப்தமிட்டபடி அவைநீரில்விளையாடுவதை நாள் முழுக்கப் பார்க்கலாம் போல் இருக்கும். தோட்டத்தில் அப்பா போடும் விதவிதமான பூச்செடிகளைத் தேடிக்கொண்டு பல தினுசு வண்ணாத்திப்பூச்சிகள் வரும். அவற்றைத்துரத்திக் கொண்டு ஓடுவது பெரிய வேடிக்கையாக இருக்கும். அந்த மாதிரியெல்லாம் ஒரு தோட்டத்தைப் பார்த்து அழகை அனுபவிக்காதவர்கள்தான் இந்த மணிபிளாண்டைப் பார்த்து மங்கமாண்டுபோவார்கள் என்று தோன்றிற்று. அதுவும் இந்தச் செடிக்கும் பணத்துக்கும் ஏதோ சம்பந்தம் கற்பித்துக் கொண்டு படும் சந்தோஷம்....ரசனையிலும் வியாபாரத்தனம்.... (அனுமானங்கள் நம்பிக்கைகள்- வாசந்தி சிறுகதைகள் )