Pages

Tuesday, June 26, 2012

பெரியாரைப் பேணுதல்--2


எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தை விடச் சுருக்கவே திரும்பிவருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. “பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்.” அப்பாவும், அம்மாவும் மேலேறிச் செல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் சொர்க்க வாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மௌனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ‘ஸ்டூலை’ வைத்து மேலேறி, மாடி விளக்கின் ‘ஸ்விட்சைப்’ போடுகிறான். திடீரென மாடி வளைவில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இரு பக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய், கீழே இறங்குகிறார்கள். பிறகு பத்திரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாரித் தூக்கிக்கொண்டு போய் மனைமீது உக்காத்தி வைக்கிறார். அப்பா பிடித்துக் கொண்டிருக்க, அம்மா, பதச்சூட்டில் வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினாற்போல் தேய்க்கிறார். நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம். இது ஆராதனை இல்லாது ஏது? ஆமாம், பாட்டியின் உடல்நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான். சரிவ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்று தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்துவிட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது. பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள், நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மௌனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது; இவர் இவரா, இதுவா? கோயிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில் தான் என்ன இருக்கிறது

3 comments:

  1. வயதான பெரியவர்களை எவ்வளவு அன்புடன் கவனித்துக்கொள்கிராரகள் என்பதை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கார்.படிக்க படிக்க நாமும் அங்கேயே இருப்பதுபோலததான் இருக்கு. இது தானே நல்ல எழுத்தின் தாக்கம்.

    ReplyDelete
  2. சரியான வார்த்தை அம்மா.இவற்றை இனி எழுத்தில்தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
    அவசரகாலம். யாரை நோவது?
    வருகைக்கும் ஆழ்ந்த ரசனையுள்ள கருத்துக்கும் நன்றி அம்மா

    ReplyDelete
  3. இப்படிக்கூட நடப்பதுண்டா. அருமை.இவள் தாய். அவர்கள் மக்கள்.தெய்வம் சூழ்ந்திருக்கும் நிலை. மிக நன்றி ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete