Pages

Tuesday, June 26, 2012

பெரியோரைப் பேணுதல்


வயதில் பெரியவர்களை , நடக்க்கஃகூட இயலாத அதி முதியவர்களை வீட்டிலுள்ளோர் எவ்வாறு பராமரிப்பது? இந்த நவீன காலத்தில் உடனடி பதில்—இருக்கவே இருக்கிறது முதியோர் இல்லம்.அங்கு சும்மா பார்த்துக் கொள்வார்களா?பணவசதியில்லாதவர்கள் என்ன செய்வது? நம் பெரியவர்கள் அதனால்தான் முதியவர்களைக் கவனித்துப் பராமரிப்பது நம் தலையாய கடமை என்று வழிவழியாக போதித்து , உருவேற்றி வைத்துள்ளார்கள். அதிலும் பெண்களின் பொருப்பு மிக அதிகம்.ஏனெனில் அவர்கள் தாய் மார்கள்.குடும்பத்திற்கு சேவைசெய்தே பழகியவர்கள் சேவை அவர்கள் ரத்த்தஃதில் ஊறியது இதை லா.சா.ரா. எவ்வளவு அழகாக தன் கதை மூலம் உணர்த்துகிறார். ஒரு பண்பான மருமகளின் கண்ணோட்டத்தில்----(-தன்கணவனுக்கு எழுதும் கடித்தஃதில்) “”இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா - அப்பா, பிறகு நாங்கள் - நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் இங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழிபாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளிய்யிருப்பது போல் பாட்டி மூன்றா மாடியில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றா மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக் கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா- எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம்காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது. சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள். ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவது போல், ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், ‘சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது. “என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்?” எனக்கேத் தெரிந்தால்தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிகிறது.

2 comments:

 1. இன்றைய சூழலில் அனைவரும் அவசியம்
  படித்தறிந்து கொள்ள வேண்டிய அருமையான
  கருத்தடங்கிய பகுதி
  பகிர்வாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. @ரமணி.,
  சார்,தலைமுறைகள் மாறினாலும் வழிவழியாக
  வரும் பண்பாடு மாறலாமா? ஒருவரது மிகச்சிறந்த
  பத்திரமான ''ஆயுள் காப்பீடு'' அவரது குழந்தைகள்தான் என்றும், அவர்களுக்காக தனது
  கடைசி பைசா வரை செலவிட்டாலும் தகும் என்று கூறுவார்கள், இது நமது பண்பாடு. ஆனல் இன்றைய நிலை பெருமைப்படும் வகையில்
  இல்லையே.
  தங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete