Pages

Sunday, November 13, 2011

‘’நா இறக்கை முறிஞ்ச மாதிரி வந்து நின்னப்ப

நீதானேம்மா தைரியம் கொடுத்தே. உன் அருமை

அந்த மனுஷனுக்குத் தெரியலேன்னா விடுன்னே.

வாழ்க்கையிலே சாதிக்க வேண்டியது எவ்வளவோ

இருக்குன்னே. நாமெல்லாம ஏதாவது சாதனைக்காகப் பொறந்திருக்கோம்னே. நீ கொடுத்த தைரியம்தான்

இப்ப நான் இவ்வளவு வளர்ந்திருக்கேன். நீ இல்லேன்னா,

நான் இல்லே’’ நான் சற்று நிறுத்தினேன். குரல் தழு

தழுத்த்து. உணர்ச்சி மேலிட்டு கன்னத்தில் முத்தம்

கொடுத்தேன்.

புல்தரையில் சொர்ரென்று நீர்விழும் சத்தம்

கேட்டு நான் என் நாற்காலியைப் பின்னுக்கு சரேலென்று

நகர்த்தி எழுந்தேன்.அம்மா உட்கார்ந்திருந்த நாற்காலியிரிருந்து

வெளிப்பட்டதை சற்றுநேரம் ஏமாற்றத்துடன் திகைத்துப்

பார்த்தபடி நின்றேன். தோற்றுப்போனவளின் துக்கத்தோடு

அம்மாவின் சக்கரநாற்காலியை வீட்டை நோக்கி நகர்த்தினேன்

டி.வி யிலிருந்து பார்வையைவிலக்கி வள்ளி என்னைப்

பார்த்தாள்

‘’அம்மாவுடைய டிரஸ்ஸை மாத்தணும் வள்ளி’’

‘’ஓ வரேன்’’ என்று மனசில்லாமல் வள்ளி எழுந்தாள்.

உடைமாற்றும்போது நான் இல்லாத சமயத்தில் இவள் அம்மாவைக் கெட்டவார்த்தை சொல்லித் திட்டுவாள் என்று

நினைத்துக் கொண்டேன். பாத்ரூமுக்கு வண்டியைத் தள்ளி

நனைந்த உடுப்பைக் கழற்றுவதற்குள் எனக்கே இடுப்பு விண்டு

போனது. மூத்திரவாடை குடலைக் குமட்டிற்று. நிர்வாண உடம்பை நீர்விட்டுக் கழுவி பவுடர் போட்டு இன்னொரு மாக்ஸி

யை உடுத்தி தலையைச் சீவியதும் அம்மா பொம்மைபோல்

சிரித்தாள். ‘’சீச்சீ,சிரிக்காதீங்க....செய்யறதையும் செஞ்சிட்டு’’

என்று வள்ளி அதட்டினாள். தான் ஏதோ ஹாஸ்யம் சொன்னது போல பிறகு என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் அவமானத்தில்

குன்றிப் போனேன்.

‘’ நம்ம மேலதான் தப்பு. மணி பார்த்து பாத்ரூமுக்கு

அழைச்சிட்டுப் போயிருக்கணும்.’’ என்றாள் வள்ளி.

நான் இல்லாத நேரத்தில் செய்கிறாள். அதற்குத்தான் சம்பளம். வள்ளிக்கு அவமானமில்லை. துக்க

மில்லை.இழப்பில்லை.

‘’மறுபடி தோட்டத்துக்குக் கொண்டு போகவா?

‘’ வேண்டாம். இருட்டப் போகுது. இங்கேயே வராந்தாவிலே உட்கார்ந்துக்கறேன். அம்மாவோட’’’ என்றேன்.

படுக்கையறையை ஒட்டிய வராந்தாவில் நாற்காலியை நகர்த்திவிட்டு வள்ளி மீண்டும் டி.வி.யின் முன்

என் அனுமதியுடன் அமர்ந்து கொண்டாள். நான் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அம்மாவின் அருகில் இருப்பதையே

விரும்பினேன். இல்லாத நேரங்களிலெல்லாம் வாட்டிய குற்ற

உணர்வுக்கு வடிகால் தேவை. டி.வி. சத்தத்தைத் தவிர்க்க நான்

படுக்கையறைக் கதவை சாத்திவிட்டு டேப் ரிக்கார்டரில் கேசட்டைப் போட்டேன். பாட்டு அலைஅலையாக வராந்தாவில்

நுழையும்போது அம்மாவிடம், ‘’சௌம்யா பாடராம்மா’’ என்றேன்.

சின்னப்பொண்ணு, எப்படிப்பாடரா பத்தியோ?’’ அம்மா மறுக்கவில்லை. பாட்டை ரசிக்கும் தோரணையில் கண்ணை

மூடிக் கொண்டாள். எனக்கே கண் அயர வேண்டும்போல்

இருந்தது. நானும் அம்மாவும் அருகருகில் சங்கீதஃத்தை

ரசித்தபடி அமைதியான இந்த மாலை நேரத்தில் அமர்ந்திருக்கும்

காட்சி என்னையே ஏமாற்றிற்று. வள்ளி வியப்பது போல எந்த

விபரீதமும் நடக்காதது மாதிரி- சரசரவென்று இருள் பரவுவது

தெரியாமல் மோனத்தில் இருவரும் அமர்ந்திருந்தோம்.

தோட்டத்து மரங்களிலிருந்து எழும்பிய பட்சிகளின் ஆரவாரம் என்னை உலுக்கிற்று. சாமிக்கு விளக்கேத்தணும் என்று

என்னையறியாமல் நான் முணுமுணுத்தபோது அம்மா சொல்வது

போல இருந்த்து. கண் மூடிய நிலையில் பிரும்ம் போல உட்கார்ந்திருந்தாள் அம்மா. திடீரென்று ஆயாசமும் நிராசையும்

என்னைக் கவ்வின. ஜனனத்திலிருந்து இன்றுவரை சுமந்த பாரங்

களை இறக்கி வைக்க நேரமில்லாமல் போனது போன்ற ஆயாசம். அம்மா தன் பாரங்களை என்மேல் சுமத்திவிட்டதன்

நிராசை. இது நியாயமில்லே என்று கத்த வேண்டும் போலி

ருந்த்து. அம்மாவைப் பார்க்கப் பார்க்க என்னுள் ஒரு பரிதவிப்பு

கனலைப்போல் நாடிநரம்புகளிலெல்லாம் பரவிற்று. நான் சாகும்

வரை அம்மாவின் ஆக்கிரமிப்பு என்னைத் தொடரப் போகிறது

என்று தோன்றியது. அம்மாவின் இஷ்டம் என்ன, எதிர்பார்ப்பு

என்ன என்று அவள் சொன்னதில்லை. வெளியில் சொல்லாமலே

அவற்றை அவள் சாதித்துக்கொண்டிருப்பதாகப் பட்டது.

அவளுடைய இஷ்டத்திற்கு விரோதமாக நடந்த என் திருமணம் ஒரு வருஷத்தில் முறிந்த்து உண்மையில் அவளுக்கு

லாபம்.’’பெத்த ரெண்டு பிள்ளைகளும் அமெரிக்காவோடு போயிட்

டான்கள். என்னை யார் பாத்துப்பா?’’என்ற அவளது பரிதவிப்புக்கு

விடை கிடைத்த்து. அமெரிக்காவில் இருப்பவன்களுக்கு நிம்மதி.

அன்றிலிருந்து இவளுக்கு நான். எனக்கு இவள். யார் யாருக்குக்

காவல் என்று புரியவில்லை. எனக்குள் இவளும், அவளுக்குள்

நானும் பிணைக்கப்பட்டிருப்பது போல் இருந்த்து.

இனம் புரியாத ஆத்திரத்தில் அவள் தோளை உலுக்க

வேண்டும்போல் இருந்த்து.

‘’உன்னைப் பார்த்துக்க நா இருக்கேன். எனக்கு யார்

இருக்கா?’’

திடீரென்று ஒரு ஆற்றாமை என்னை ஆட்கொண்டது.

எனக்கு யாரும் இல்லாத்தற்கு,எனது வெறுமைக்கு இவளே

காரணம் என்று தோன்றிற்று. வள்ளியின் எதிரே பதுங்கிக் கொள்ளும் ஆங்காரம் தனிமையில் கூச்சமில்லாமல் பீறிட்டது.

‘’எனக்கு யார் இருக்கா?’’

வராந்தாவுக்கு அப்பால் கவ்விய இருட்டைப் பார்த்தபடி

இருந்த அந்தக் கண்ணாடி முகத்தை நான் வெடுக்கென்று திருப்

பினேன்.

அம்மா என்னை அலங்க மலங்கப் பார்த்தாள்.

‘’ எனக்கு யார் இருக்கா?’’என்று அவள் தோளைக்

குலுக்கினேன். பகபகவென்று எனக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்த்து. அவள் தோளில் முகத்தை அழுத்தி,

‘’நீ போயிடு,.சீக்கிரம் போயிடு’’என்றேன்.’’என்னைக்

கேவலப் படுத்தாதே, என்னை அவமானப் படுத்தாதே, போயிடு,

எனக்குத் தாங்கல்லே, போயிடு....’’

அடக்கி வைத்த பிரவாகமாய்,முதுகு குலுங்கி,கண்ணி

லிருந்து நீர் வழிந்த்து.

நான் நிமிர்ந்தபோது குத்திட்ட பார்வையுடன் அம்மா

என்னைப் பார்த்தாள். ‘’நான் என்ன செய்யட்டும்?’’என்றேன்

குற்ற உணர்வுடன்.’’உன்னைப்பத்தி நல்ல நினைவெல்லாம்

எனக்கு மறந்து போச்சு. நீ படுக்கையை நனைக்கிறதுதான்

ஞாபகம் வருது. நீ என்னிக்கோ செத்துப் போயிட்டே..வெறும்

இந்த உடம்பைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. கொடுக்கிற

மருந்தெல்லாம் உடம்பைத்தான் வளர்க்கறது. எத்தனை தடவை

விழுந்திருப்பே? பொசுக்குனு போயிடக்கூடாதா? கிழத்துக்கு

உசிர் கெட்டிங்கறான் தோட்டக்காரன். என்ன புண்ணியம். ஏன்

என்னை வதைக்கிறே?’’

அம்மா என்னையே வெறித்துப் பார்த்தாள்.

‘’நா சொல்றது உனக்குப் புரியறதோ? எனக்கு யார் இருக்கா? என்னைப் பயமுறுத்தாதே.’’

2 comments:

  1. பெத்ததாயை இதுபோல பார்க்கும் நிலமை யாருக்குமே வரக்கூடாது.என் அம்மாவையும் இதுபோலத்தான் நான் பார்த்தேன் அவளின் கடைசி காலங்களில். அந்த நினைவுதான் முட்டிண்டுவந்தது. என்கணவரின்கடைசி காலங்களை சொன்ன எனக்கு என் அம்மாவின் கடைசிசிகால பரிதாபங்களைச்சொல்ல மனசுவலிக்குது.

    ReplyDelete
  2. அநாயாச மரணம சம்பவிக்க வேண்டுமென்று என்
    அம்மா தினமும் அதற்கென்ற உள்ள சில ஸ்லோகங்
    களைப் பாராயணம் செய்வார்.ஆனால் இறுதி
    நாட்களில் எவ்வளவொ உயர்வாக பிரியத்துடன்
    கவனித்துக் கொண்டிருந்த போதிலும் எலும்புகள்
    வலுவின்மையால் தொடை எலும்பு முறிந்து
    ஆபரேஷன் செய்தும் எலும்புகள் சேராத நிலையில்
    மூன்றரை வருடங்கள் நீர் படுக்கையிலேயே
    இருந்து பின் காலமானார். வயது90.அவர் பட்ட
    அவஸ்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலையில் இருந்தோம்.அன்பான வார்த்தை
    களைக் கூறுவதேத் தவிர வேறு என்ன செய்ய
    முடியும்? அந்த சோதனமிகுந்த நாட்களில் வாசந்தி
    கதைகள் ஓரளவு ஆறுதலைக் கொடுத்தன.
    நம்மைவிட( நினைவிழந்த )மோசமான நிலையில்
    இருந்த தாயாரைப் பராமரித்துக் கரையேற்றியிருக்
    கிறாரே. அதைவிட இது பரவாயில்லை என்று
    நினைத்துக்கொள்வோம். உங்கள் நிலை இதைவிட
    மோசமாக இருந்த்து அல்லவா? இதை எண்ணித்தான் உங்களை உயர்வாக நினைக்கத் தோன்றுகிறது.உங்எள் தாயாரின் இறுதிக் காலமும்
    துயரம் மிகுந்த்தாக இருந்த்து என்பதை அறிய
    கஷ்டமாக இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி அம்மா.

    ReplyDelete