Pages

Saturday, January 7, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--12

a

.
‘’ஸாருக்கு எந்த ஊர்?’’ என்று சாரங்கன் அப்போது விசாரித்தான்.

‘’எனக்கு தூத்துக்குடி கிராமம் கும்பகோணம் காலேஜில் படித்தேன்’’.

‘’கும்ப கோணத்தில் ஜாகையோ?’’

‘’இல்லை. ஹாஸ்டலில் இருந்தேன்!’’

இந்த வேலைக்கு வருகிறவன் ஹாஸ்டலில் எப்படி இருந்தான் என்பதை
சம்சயிக்கிற மாதிரி அவனைப் பார்த்து சாரங்கன் விழித்தான். பிறகு தானே ஒரு மாதிரி சமாதானம் செய்து கொண்டது போல் பல முறை தலையை
ஆட்டினான். இங்கே நடப்பதில் சிரத்தையே இல்லாதவனாக வெங்கடாச்சாரி முற்றும் மௌனமாக இருந்தான்.


இதற்குள் குப்புசாமி அன்னத்தை முதலில் இலைகளில் பறிமாறவும்,ஸ்தி ரிகளும் தொடர்ந்து முனைந்தார்கள். வெள்ளரிக்காய்ப் பச்சடியை மைதிலி பரிமாறியபோது, வேதாந்தத்தின் இலையில் இரண்டு கரண்டிகளாக வார்த்தாள்.
‘ஆகா! இங்கே என்னிடம் அநுதாபம் கொள்ளும் ஆத்மா ஒன்றும் இருக்கிறதா?’’ என்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். மைதிலி அநுதாபத்தின் மீது அவ்வாறு செய்தாளா, அகஸ்மாத்தாக அவ்வாறு செய்தாளா என்பதை அவளுடைய நிஷ்களங்கமான முகத்திலிருந்து அவனால் ஊகிக்க முடியவில்லை.


வைதேகி நெய்ப்பாத்திரத்துடன் பிரசன்னமானாள். சாரங்கன் இலையில் முழுசாக இரண்டு கரண்டி வார்த்துவிட்டு, ‘’கையையும் காட்டுங்கள் சொல்கிறேன்!’’ என்று அதட்டி உத்தரவு போட்டாள். சாரங்கன் கீழ்படிந்தான். கரகரத்த குரலில், ‘’அப்பா1 உங்கள் மாப்பிள்ளைக்கு அசாத்திய உஷ்ணம்.
ஓரொரு நாள் இருமல் பிடித்துக் கொண்டால், ராத்தூக்கம் கிடையாது. எப்பப்
பார்த்தாலும் ஆபீஸ் வேலை, இல்லாவிட்டால் ஸ்நேகிதாளோடு பேச்சு, அலைச்சல்! சொன்னால் கேட்கிறதில்லை.!’’ என்றாள் புகாராக.


சந்தானம் பெருமை கலந்த புன்னகையுடன் மாப்பிள்ளையைப் பார்த்தார்.

‘’நான் என்ன பண்ணுவேன்! ஆபீஸிலே ஏதேனும் சந்தேகம்னா,நம்ம கிட்ட ஓடி
வந்துடறான்., அவ்வளவு பேரும், மூணு அஸிஸ்டெண்ட் செகரிட்டரிகள் ஞாயிற்றுக் கிழமை நம் வீட்டில் பழி கிடக்கிறார்கள். முந்தாநாள் பாருங்கள், சித்தே படுக்கலாம்னு வந்தேன். லெப்டினண்ட் கர்னல் நடேசன் டின்னருக்குக் கூப்பிட்டுட்டார். மாட்டேன்னு சொல்ல முடியவில்லை.!’’


‘’சினேகிதாள்! என்ன பண்றது! பெரிய பதவி என்றால் இதெல்லாம் தவிர்க்க முடியாது—சமாளிக்கறதிலேதான் சாமர்த்தியம் இருக்கிறது! ஒருத்தரையும் பார்க்க முடியாதுன்னு சமையால் கட்டிலே இருந்துவிட்டால் அப்புறம் என்ன1’’
என்றார் பெரியவர்.


மாதுஸ்ரீ கௌசல்யா பொரித்த அப்பளங்களுடன் வெளியே வந்தாள். மாப்பிள்ளையிடம் வரும் போது கை தவறி மூன்று அப்பளங்கள் விழுந்துவிட்டன.! ‘’மாப்பிள்ளை, இத்தனை செல்வாக்கில் கொஞ்சம் உபயோகப் படுத்தி, நம்ம வெங்கடாச்சாரியை ஒரு நல்ல வேலையில் உட்கார்த்தட்டும்!’’ என்றாள்.

‘’மைதிலியின் பெரியப்பாதான் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாயிருக்கிறார். ‘வா’ என்றுகூட எழுதியிருந்தார்.வெங்கடாச்சாரிக்குப் போக இஷ்டம் இல்லை.!’’ என்று பெரியவர் கூறினார்.

‘’பார்க்கிறேன், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!’ என்றான் சாரங்கன்
அமுத்தலாக.

‘’ஏண்டா, பறக்காவெட்டி! அதுக்குள்ளே அப்பளத்தைத் தின்னு தொலைச்சிட்டியா?’’ என்று பொதுவில் கௌசல்யா சொல்லவும், வேதாந்தம்
தன்னைத்தான் சொல்கிறாளோ என்று திடுக்கிட்டுப் போனான். நல்ல வேளையாக வாண்டுப் பயல் சுந்துவைச் சொன்ன வார்த்தை அது.!

‘முதுகில் நாலு வையேன் சுடச்சுட!’’ என்று வைதேகி பல்லைக் கடித்து சிபாரிசு செய்தாள்.

‘வாத்தியார் சாமர்த்தியத்தை அதில்தான் பார்க்கப் போகிறேன்! சுந்துவை மட்டும் வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் அவர் கெட்டிக்கார்ரஃதான்.!’’ என்று சந்தானம் சொல்லவும் , ‘’ சுந்துவுக்கு ‘ட்யூஷன் வாத்தியார் வேறயா?’’ என்று
அவர் மனைவி கேட்டாள்.

இப்போது பேச்சு வேதாந்த்தஃதின் பக்கம் திரும்பியது.’’என்னென்ன சொல்லித்தர வேண்டியதென்று வாத்தியார் கேட்டுக் கொண்டுவிட்டார் அல்லவா? என்று சாரங்கன் விசாரித்தான். இந்தக் கேள்வி வேதாந்தத்தைப் பார்த்துக் கேட்கப் பட்டது
‘’இன்னும் இல்லை. மத்தியானம் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பதில் கூறினான் வேதாந்தம்.

ஊறுகாய் ஜாடியுடன் வந்த வைதேகி, ‘’ அப்பா! நீங்கள் யாரிடம் ட்யூஷனுக்கு ஆள் அழைத்துவருவதாகச் சொன்னேள்! இங்கே இவரானால் ‘பஸ்ட் கிளாஸ்
பிள்ளையாகப் பொறுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவனைக்கூட இங்கு வரச் சொல்லி இருக்கிறார். பாருங்கள்! காலம்பற சமையல் காரி வந்து சொன்னப்புறந்தான், நீங்கள் கூட்டிக் கொண்டு வந்த சமாச்சாரமே தெரியும்!’’
என்றாள்.


கரகரவென்ற தொண்டையிலிருந்து வந்த இந்தக் கரகரப்பான விஷயம், வேதாந்தத்தின் நெஞ்சை அரித்தது. இந்த அற்ப வேலையில் கூடப் போட்டியா? அட என் கடவுளே.!


‘’வரட்டும், வரட்டும்! இவன் ஏதோ வந்து கேட்டான். சட்டென்று நான் தீர்மானம் பண்ணிவிட்டேன்!’’ என்றார் சந்தானம்.

‘, ‘’அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குக் கிடைக்கிறது! நான் இவரிடம் உடனேயே சொல்லிவிட்டேன். வாத்தியார் நடந்து கொள்ளுகிற முறையிலேயும் இருக்கிறதே எல்லாம்! இல்லையா?’’


ஒரே நிமிஷத்தில் வேதாந்தத்தின் மனம் புழுவெனத் துடித்தது அனேகமாகத் தன்னை அவமானப் படுத்தும் முறையிலேயே பேசும் இந்தக் குடும்பத்திறகு வந்தோமே என்று வெதும்பினான். அவனிடம் பணம் இல்லை. ஆனால் உள்ளம் இருந்தது. தலையைக் கவிழ்த்துக் கொண்ட வேதாந்தம் அகஸ்மாத்தாக சமையற்கட்டின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். இரக்கம் தோய்ந்த முகத்துடன் மைதிலி அங்கே அவனையே பார்த்த வண்ணம் நின்று
கொண்டிருந்தாள். சற்று ஆறுதல்தான். ஆனால் இந்தத்தெய்வம் அவளுடைய நாத்தனாரை அடக்கும் சக்தி; பெற்றிருக்கவில்லையே! ஒரு பெரு மூச்சு விட்டான் வேதாந்தம்


சாப்பாடு முடிந்து எல்லாரும் எழுந்தார்கள் இப்படியாகத் தினமும் சாப்பாட்டு வேளையில் பேச்சு நடக்கிறதென்றால், இதைவிட நரகம் வேறு இராதே என்று
வேதாந்தம் பயந்தான். ஆனால்,தனது அச்சத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமலே மெல்லக் கூடத்துக்கு வந்தான்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

2 comments:

 1. எல்லாரும் ஒன்ன்னாக குடி உக்காந்து சாப்பிடுவ்தே தனி சந்தோஷம்தான். வேதாந்தம் டியூஷன் சொல்லிக்கொடுக்க வந்திருந்தாலும் அவனையும், கூடவே உக்கார வைத்து சாப்பாடு போடராளே அதுவே பெரிய விஷயம்.

  ReplyDelete
 2. நீங்கள் கூறுவது சரிதான். ஆனல் புதிதாக வீட்டிற்கு
  வந்திருக்கும் ஒருவரை சாப்பாட்டு வேளையில்
  வேலைபற்றி எச்சரிக்கும் தொனியில் ஆளுக்குஆள்
  பேசினால் சாதுவான அவன் மனம் நொந்து இதைவிட வேறு நரகமே வேண்டாம் என்று வருந்தும் அளவு நடக்கக்கூடாது இல்லையா?அதுவும்
  வாழ்ந்து கெட்டவன் இல்லையா?
  நன்றி அம்மா

  ReplyDelete