Pages

Friday, December 16, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-3

..

.

‘’என்ன! நின்னுண்டேயிருந்தா? என்ன யோசனை இப்ப,,அவரைக் கூடத்திலே
உட்கார்த்தி வச்சுட்டு?’’
கூடத்துக்குப் போனேன். சன்யாசி தூணில் தலையைச் சாய்த்திருந்தார். பசி.
அயர்ந்துவிட்டார். என் அடியோசை கூட அவர் கண்ணைத் திறக்கவில்லை.

திரும்பி உள்ளே வந்தேன். நிலைமையைச் சொன்னேன்.
இதோ –அஞ்சு நிமிஷம். கூட்டும் பாயசமும்தான்.பாக்கி’’ என்று
அடுப்புத் தீயைக் களைக்க விட்டாள் அவள்.
‘’நாமகூட சன்சாசம் வாங்கிண்டா நல்லதில்லையா?’’ என்று கேட்டேன்.

நாம கூடன்னா? ரண்டுபேரும் சேர்ந்து சன்சாசம் வாங்கிண்டு ஆளுக்கொரு
கமண்டலமும் தண்டமும் ஏந்திண்டு, சேர்ந்து நடக்கலாம்னா??’’
‘’இல்லை, ஒருகவலை கிடையாது, பந்தம் கிடையாது. தினம் ஒரு ஊர்—ஏதோ
கிடைச்ச இடத்திலே சாப்பாடு—பகவானை நினைச்சிண்டே இருக்கிறது’’

‘’அதை அப்புறம் யோசிக்கலாம் . இலை இல்லை. கொல்லையிலே போய்
பெரிய நுனி இலையா ஒண்ணு நறுக்கிண்டு வரலாமா---?’’

இலையை நறுக்கிக் கொண்டு கூடத்திற்குத் திரும்பியபோது, ஸ்வாமி விழித்துக் கொண்டு கமண்டலுவைச் சாய்த்து, நீரால் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

பிட்சை ஆயிற்று. எங்களுக்கும் சாப்பாடு ஆயிற்று. ஸ்வாமி சற்று ஓய்வு எடுத்துக் கொண்டார். பிறகு ஊர் உலக விஷயங்களெல்லாம் கேட்டார்.ஆத்மிக விஷயங்களைச் சொன்னார். கோணல் கிச்சான் வந்தான். அவன் மனைவியைப் பற்றி விசாரித்தார். உடையாரிடம் மருந்து வாங்கி,வாந்தி நின்று விட்டதாம்.
ஜுரமும் இல்லையாம்.மறுநாள் தன் வீட்டில் பிட்சை ஏற்குமாறு மீண்டும் ஒரு முறை வேண்டிக் கொண்டான் அவன். கர்ணிகர் வந்தார். அவர், அவர் குடும்பம், சொத்து முதலியவற்றை விசாரித்தார் ஸ்வாமி. சீதாராமன் வந்தான்.
அவனையும் விசாரித்தார். சேது வன்னியர் வந்தார். அவரையும் விசாரித்தார்.
மேலத்தருவிலிருந்து பாலுத் தென்கொண்டார் வந்தார். அவரையும் விசாரித்தார். எல்லோரும் விழுந்து வணங்கிவிட்டுப் போனார்கள்.

எனக்குப் பொறாமையாக இருந்த்து. அவர் யாரையும் தாழ்வாக, தவறாகப் பேசவில்லை. உபதேசத்தைத் தொழிலாக்கஃ கொண்டவர்கள் போல் யாரையும்
குறைகூறவில்லை.கிண்டல் செய்ய’வில்லை. பரம சாத்விகராக,எல்லாவற்றையும் துறந்துவிட்டு என்னை ஏங்க ஏங்க அடித்துக்
கொண்டிருந்தார்.

சன்னியாசம் என்ற நிலையை எப்படிக் கற்பனை செய்து ஒரு மரபாகக கொண்டு வந்தாகள்? எந்த மகாமேதையின் கற்பனை அது? அவர் முன்பு
உட்கார்ந்து நினைவிழந்து கிடந்தேன் நான். தெருவில் வெய்யில் மஞ்சள் பூசிக்
குளித்துக் கொண்டிருந்த்து.

வாசலோடு போய்க் கொண்டிருந்த அக்கரை கோபாலன் ஸ்வாமிகளைக்
கண்டதும் வந்தான். வணங்கினான்..அவனையும் விசாரித்தார் அவர்.
‘’சாப்பாடு ஆயிடுத்தா? இன்னிக்குக் கதைக்கு வராப்போல்தானே?’’ என்றான்
என்னைப் பார்த்து.
‘’வரணும்’’ என்றேன்
கதையா?’’ என்றார் ஸ்வாமி.

ஆமாம். அக்கரையிலே இவர் ஊரிலே ராமாயணம் நடக்கிறது, ஒருமாசமா. நானும் தினமும் போய் வருகிறேன். சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டுத் தினமும்
புறப்பட்டு விடுகிற வழக்கம். அதைத்தான் கேட்கிறார்’’ என்றேன்.

நானும் வருகிறேனே. சாப்பிட்டுவிட்டு இதோ புறப்பட்டு விடுகிறது’’ என்று
துரிதப்டுத்தினார் ஸ்வாமி.

இருட்டுகிற சமயத்துக்குக் கிளம்பினோம். கோணல் கிச்சான் கீரைத் தண்டு
மாதிரி ஆடியவாறு முன்னால் பேட்டரி விளக்கை அடித்துக் கொண்டே நடக்க
இருவரும் பின்னால் நடந்தோம். மூங்கில் பாலத்தில் அடி வைத்து ஆற்றைக் கடந்தோம். தவளைகள் கொரகொரத்தன. சிள் வண்டுகள் இரைந்தன. தென்னை
மரங்கள் சலசலக்க,ஒரு சவுக்கைத் தோப்பு கிசுகிசுத்த்து. மூங்கில் தோப்பு உறு
மிற்று. ஸ்வாமியோடு நடக்கும் பொழுது இந்த ஓசைகள்தான் மனிதன் கேட்கவேண்டிய ஓசை, எய்த வேண்டிய பேறு என்று தோன்றியது.

ஊருக்குள் திரும்பினோம். தெருநடுவில் ஒரு பந்தலில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் தெரிந்தது. சுருதிப் பெட்டியின் ரீங்காரமும் குரலும் கேட்டன.

‘கதை ஆரம்பித்து விட்டாற்போல் இருக்கு. என்னாலே தாமதம் உங்களுக்கு’’ என்றார் ஸ்வாமி.

நெருங்கினோம். பந்தல் வந்துவிட்டது. திண்ணையில் கதை சொல்லிக் கொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தினார். கண்ணை இடுக்கி நாங்கள் வருவதைக் கவனித்தார். ஸ்வாமிகளைப் பார்த்தார்.

2 comments:

  1. உண்மையான சன்யாசிகளிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கு. உயர்வு தாழ்வு, ஜாதி வித்யாசம் பாராமல் அனைவரிடமு ஒர்ரெமாதிரி பேசி பழகணும்.அந்த விஷயம் அழகா சொல்லப்பட்டிருக்கு.

    ReplyDelete
  2. நாட்டிறகு நல்லொழுக்கத்தைப்போதிக்க எந்தப்பற்றுமில்லாத சனயாசிகள் மிகவுமதேவை.என்ன, அவர்கள உணமையானவர்களாக இருக்க வேண்டும். இப்பொழுதுதான் போலிசனயாசிகள் பருத்துவிட்டனரே
    கருத்துக்கு நனளி அம்மா.

    ReplyDelete