Pages

Saturday, December 10, 2011

தி. ஜானகி ராமன்

காவேரி தீரம்

ஓடும் நீரைக் குத்திட்டாற்போலப் பார்த்துக் கொண்டேயிருந்தால்

மனது எங்கோ போய் விடுகிறது. ஒன்பது மாத காலம், அல்லில்லை, பகலில்லை, வெயிலில்லை, மழையில்லைஅப்படி கர்ம சிரத்தையாக இந்தக் காவேரி ஓடிக் கொண்டிருக்கிறது. யாருக்காக ஓடுகிறது?- இதுவரை

அம்மாவுக்காக ஓடிற்று. இப்போது மறுபடியும் உலகத்திற்காக ஓடத்

தொடங்கி விட்டது.

தொமேர், தொமேர் என்று வாண்டுப் பயல்கள் கரையில் நின்ற நாவல்

மரத்தில் ஏறி ஏறி ஆற்றில் குதி போட்டுக்கொண்டிருந்தார்கள். குஞ்சு திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.குதியினால் தெரித்த நீரில் ஓரிரண்டு நிவலைகள் திண்ணையின் முகட்டில் வந்து விழுகின்றன.

காவேரி அவ்வளவு கையெட்டு.. வாசற்படியைவிட்டு இறங்கி சற்று காலை வீசி வைத்தால் முதல்படி மீதுதான் வைக்க வேண்டும். அக்கரையிலிதுந்து பார்த்தால் ஒவ்வொரு வீடும் காலை நீரில் தொங்கவிட்டு கனவு காண்பது போல் இருக்கும். இப்படி ஒரு தெருவே கட்ட வேண்டுமென்று யாருக்குத்தான் தோன்றிற்றோ! ! குடிக்க, குளிக்க, சௌசம் செய்யஎல்லாவற்றிற்கும் இந்தக் காவேரிதான் தெருவிலிருக்கிற ஆச்சாரப் பாட்டிகள் பேரன் மேலே பட்டு விட்டான், சாக்கடை நீர் காலில் தெளித்துவிட்டது என்று நினைத்து நினைத்து

வாசலுக்கு வந்து ஒரு எட்டு வைத்து முழுகிவிட்டுப் போகிறார்கள். அம்மாவும்

அப்படித்தான் செய்து கொண்டிருந்தாள். நினைத்து நினைத்து வந்து முழுகுவாள். சிலு சிலுப்புக்கு அந்த எண்பத்தைந்து வயது அஞ்சினதில்லை.

கை,கால் மூட்டுவலி,முதுகுவலிஇதெல்லாம் அவளுக்கு என்னவென்றே

தெரியாது. அவள் அஸ்தியைக் கரைக்கிறவரையில் பல் முப்பத்திரண்டும் தேசல் மாசலில்லாமல் தாக்குப் பிடித்துவிட்டன. இப்போதும் அம்மா படியில்

உட்கார்ந்து அலுத்துக் கொள்வதுகூடக் கேட்கிறார்ப்போல் இருக்கிறது.நான்

முழுகிட்டுப் போயிடறேனே, அப்புறமா குதிக்கிறதோ, காலை ஒடிச்சுக்கறதோ , எதையாவது செய்யுங்களேண்டா’’, மற்ற கிழங்களைப் போல கரியாய்ப்’’ போகவும் , ‘’கட்டையிலே ‘’ போகவும் அவளுக்கு ஆசி கூறத் தெரியாது.

சரி,பாட்டி,சுருக்ககஃ குளிச்சுட்டுப் போங்கோளேன். ஜலதோஷம் வந்து தொலைக்கப் போறது.’’ என்றுஒரு வாண்டு சொல்லி ‘’எலே, இருங்கடா, பாட்டி

கரையேறட்டும் ‘’ என்று மற்றதுகளை அடக்கி வைத்திருக்கும். அம்மாவுக்கே காவேரி ஓடினாற்போலிருந்தது. கால் நகம், கை நகம் ஒன்றையும் விடாமல்

இவள் தேய்த்து சுத்தி பண்ணிக் காவேரியில் கரைத்துக் கொண்டேயிருப்பாள்

எழுபத்திரண்டு வருஷம் இப்படிக் கரைத்திருப்பாள். பதினாறு வயதில் இந்த வீட்டில் புகுந்தாளம். கடைசியிலே போன ஆனிக்கு அவளே கரைந்து போன பொழுது அவளுக்கு வயது எண்பத்தாறு.சின்ன வயதில்லை. ஆனால் அம்மா

அம்மாதானே.? ஆயிரம் பெண்டாட்டி வந்தாலும் ஆகிவிடுமா? ஒரு தலைவலி வந்து இவள் நெற்றியில் கை தொட்டுத் தடவினால்,அம்மா தொடுகிற மாதிரி ஆகி விடுமா?

இத்தனை குதி, இத்தனை வாண்டுகள்,இத்தனை இரைச்சலுக்கும் நடுவில்

படிக்கட்டு சூன்யமாகத்தான் இருந்தது குஞ்சுவுக்கு. சற்று கழித்து அவர் மனது கூட சூன்யமாகிவிட்டது. ‘’அம்மா, அம்மா’’ என்று முணு முணுக்கையில்

மனது சோம்பி, கண் செருகிக் குத்திட்டுக் கிடந்தது.

(அப்பாபிள்ளை----தி.ஜானகிராமன்.சிறுகதை)

2 comments:

 1. எங்க கிராமத்லயும் ஒரு தெருவில் எல்லார் வீட்டுக்கொல்லைப்புரமும் கன்னடியன் கால்வாய் சுழித்து ஓடும். நாங்கல்லாம் கதை பேசுவது துணி துவைத்துக்குளிப்பது படிகள் எல்லாத்தையும் அலம்பிவிட்டுட்டு அதிலயே பிசைந்த தயிர் சாதமும் வடுமாங்கா ஊறுகாயும் போட்டுண்டு அளவு தெரியாம சாப்பிடுவோம்.அந்த நினைவுகளை நினைக்க வைத்த சிறுகதை.

  ReplyDelete
 2. நகர வாசிகளான நாங்கள் இதையெல்லாம் கனவில்
  அல்லது சினிமாவில்தான் பார்க்க முடியும்.ஆனால்
  காலத்தின் கோலத்தால் அந்த இடங்கள் முன் போல்
  இருக்காதென்று நினைக்கிறேன்.வைகை அணை
  கட்டுவதற்கு முன் அனேகமாக மழைகாலத்தில்
  பல நாட்கள் வைகையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.இப்போது சாக்கடைதான் ஓடுகிறது.
  நாம் ரசித்த காட்சிகள் எல்லாம் நிச்சயமாக அடுத்த தலைமுறைக்குக் கிடைக்காது என்றே நினைக்கிறேன்.ஆனால் அது பற்றி அவர்கள் கவலைப் படமாட்டார்கள். அவர்களுக்கு' ஒய் திஸ் கொலவெறி' யே போதும்.வருகை,கருத்துக்கு மிக்க நன்றி அம்மா.
  மிக்க நன்றி அம்மா

  ReplyDelete