Pages

Wednesday, December 28, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்--3

கோபாலசுவாமி அய்யங்கார் அவனை அழைத்து, தேசிகாச்சாரியின் பொருளாதார நிலை படுமோசமாக இருக்கிறதென்று சொன்னதும் , வேதாந்தத்திறகு தன்
தகப்பனார் பேச்சில் ஒரு புதிய அர்த்தம் தொனித்தது.’’என்னால் உனக்கு பணம்
ஒன்றும் வைத்துவிட்டுப் போக முடியவில்லை. குறைந்த படசம் ஒரு பி.ஏ. பட்டமாவது கிடைக்கும்படி செயது விட்டேன் எனக்குப் பிறபாடு எப்படியோ
பிழைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே தவறாமல் பாஸ் செயதுவிடு.!’’ என்று
அவர் சொல்வதாக அர்த்தம் புரிந்து கொண்டான்.

உண்மையும் அதுதான். கெட்ட சகவாசம், துர்நடத்தை என்று ஒன்றுமே தேசிகாச்சாரிக்கு இருந்ததில்லை. அவருடைய ஒரே கெட்ட குணம் நாலு பேருக்கு தான் ஒரு பெரிய பணக்காரன் என்று காட்டிக் கொள்ள வேண்டும்.
என்பதுதான்.! இதற்காக அதீதமான செலவுகளில் தொடர்ந்து ஈடுபட்டார் அவர்.
முக்கியமாக அவருடைய பணத்தை ஒன்றுவிட்ட மாமா கோபால சுவாமி அய்யங்காரே சாப்பிட்டிருக்கிறார். அய்யங்காருக்குப் பட்டணம் போகவேண்டுமென்றால், தேசிகனையே தமக்குத் தகுந்ததுணையாகத் தேர்ந்தெ
டுத்துக் கொள்வார் பட்டணத்தில் நண்பர்களுக்குச் செயதுவைக்கும் உபசாரங்க
ளுக்குத் தேசிகனைக் கையைக்காட்டிவிடுவார். மாமாவின் கூடச் செல்வது,அவர்பின் கைகட்டி நிறபது,அவருக்குத் தாசானுதாசனாக உழைப்பது,
தம் பணத்தை அள்ளி வீசுவது இதெல்லாம் தேசிகாச்சாரிக்கு ஒரு பெருமையாக இருந்தது. ‘’நான் கோபாலசுவாமி அய்யங்காரின் மருமான்’’என்று சொல்லும்போது,’’சாட்சாத் ஸ்ரீமந்நாராயணனுடைய மருமான்’’
என்று சொல்லிக் கொள்ளுகிற மாதிரி அவர் உள்ளம் பூரித்துப் போனார்.


வேதாந்தத்திறகு அப்பாவின் மாதுலபகதி ஒரு புதிராகவே இருந்தது. அப்படி அந்த மாமாவிடம் என்ன விசேஷம் இருந்ததென்று அவனால் கண்டுகொள்ள
முடியவில்லை. ‘’காலணா வரத்து இல்லாத,கௌரவம் கொடுக்காத மாமன் வீட்டை இவர் ஏன் சுற்ற வேண்டும்?’’ என்று எண்ணினான்.’’நம் அப்பாவுக்கு சொத்து இல்லையா? இவர் அய்யங்காரை மாமா என்று கொண்டாடுகிறாரே ஒழிய,மாமா ஒருகாலத்திலும் ‘என் மருமான் என்று சொல்லிக கொள்ளவில்லையே’ என்று அவன் இளம் மனதில் தோன்றியது உண்டு.

ஒருசமயம் அந்த மாமாவுடன் வேதாந்தத்தை நாகப்பட்டணம் அனுப்பியபோது
அவர் தமக்கு என்று இரண்டாம்வகுப்பு டிக்கட்டும், வேதாந்தத்துக்கு மூன்றாம்வகுப்பு டிக்கட்டும் வாங்கிக கொண்டது இன்றும் அவன் நெஞ்சைவிட்டு அகலவே இல்லை.! அத்தனை வித்தியாசம் பாராட்டுபவர் அவர். என்ற எண்ணம் ஊர்ஜிதமாகிவிட்டது.

தேசிகாச்சாரி, மாமாவின் மூலம் கோட்டைவிட்ட பணத்திற்குக் கணக்கே இல்லை. வேறு ஆடம்பரங்களிலும் இவர் பணம் செலவாயிற்று. ஆவணிஅவிட்டம் என்றால் ஒரு பெரிய பேலா நிறைய வெள்ளிப் பணத்தை வைத்துக் கொண்டு விநியோகம் செயது யகஞோபவீதங்கள் வாங்கிக் கொள்வார். அரைரூபாய் செலவாக வேண்டிய இடத்தில் ஜந்துரூபாய் போகும்.
வருவாய் இல்லாத குடும்பமாகையால் ‘’முதல்’’ அழிந்தது. நிலங்களும் வீடும் சேர்ந்து அடைமானமாக இருந்தன. வேதாந்தம் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தபோது
அவருக்கு தேக அசௌக்கியம் வந்து , சென்னை பெரிய டாக்டர் ஒருவர் தருவிக்கப் பட்டார். ஏராளமான செலவு..’’ இருதயம்கோளாறாக இருக்கிறது.
மெள்ளத் தள்ளிக் கொண்டு வர வேண்டியதுதான்.’’ என்று வைத்தியர் சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

இருதய நோய், மார்வலி முதலியவை பெரியமனுஷர்களைச் சேர்ந்தவை. அவைகளைப் பெற்று நாலுபேரிடம் சொல்லிக் கொள்வதே ஒரு கியாதி என்று
ஒரு தப்பபிப்ராயம் கொண்ட தேசிகாச்சாரி விலைஉயர்ந்த மருந்துகளை நாமஸ்மரணம் செயதுகொண்டும் , பீரோக்களில் வாங்கி அடுக்கிக் கொண்டும் காலந்தள்ளினார். மருந்துகள் பலன் தரும் காலம் போய்க் கடைசியில் அவரைக் கீழேதள்ளிவிட்டன. வேதாந்தத்துக்கும் ஆள் வந்தது.

(அமரர் தேவன்---மிஸ்டர் வேதாந்தம்)’.

2 comments:

  1. அவர் ஏமாற்றுகிரார் என்று ஏன் இவரால புரிந்து கொள்ளவே முடியல்லே?

    ReplyDelete
  2. சிலர் சுபாவம், மேலே உள்ளவர்களை துதிப்பார்கள்.
    கீழே உள்ளவர்களை துச்சமாக மிதிப்பார்கள்.தேசிகாச்சாரி இந்த ரகம்.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அம்மா

    ReplyDelete