Pages

Sunday, December 11, 2011

தி. ஜானகி ராமன்

காவேரி தீரம்3

சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால்,

அன்று ஒரு நாளாக இல்லாத திருநாளாக புத்தகத்தின் மேல் வருகிற

ஆசை! கீழே கிடக்கிறபல்பொடி மடிக்கிற காகித்தஃதையாவது

எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்! அப்படி ஒரு மோகம் அல்லவா

பிறந்திருக்கிறது இன்று இந்தக் காவேரி மீது!.

அப்படியும் சொல்வதற்கில்லை என்று திருத்திக் கொண்டான் அப்பு.

காணாத்தைக் கண்டுவிட்டாற்போல காவேரியை இப்பொழுது பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். ஆனால் பதினாறு வருடமாக,பொழுது

விடிந்தால், பொழுது சாய்ந்தால் காண்கிற காவேரிதான் இது. இந்தூருக்கு வந்த நாளிலிருந்துஅரையில் மூன்று முழ ஈரிழைத் துண்டும், தலையில் எஸ்

கட்டுப் பின்னலுமாக அப்பாவோடு இங்கு வந்த நாள் முதல் இந்தக் காவேரியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அன்று பாடசாலையில் சேர்ப்பதற்காக அவனை அழைத்து வந்தார் அப்பா.

ரயிலில் இருவரும் வந்தார்கள். இரவு துழுவதும் பயணம். திருச்சி ஜங்ஷனில் வண்டி மாறி, மறபடியும் ஒரு நான்கு மணி நேரப் பயணம். சுடச்சுட வெளுப்பு வெயில் ஏறிய நேரத்தில் ஸ்டேஷனில் இறங்கினார்கள். ஒரு மைல் ரயில்

பாதையை ஒட்டிய சாலையில் நடந்தார்கள். கிராமத்தில் நுழைந்தார்கள்.

பாடசாலையில் சேர்த்தாயிற்று. இரவு கூடவே படுத்திருந்தார் அப்பா.அவனுக்குப் பக்கத்திலேயே. வெகு நேரம் வரை அவன் கையையும், முதுகையும் தடவிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். விடியற்காலையில்

எழுந்து இந்தக் காவேரிக்கு, இதே துறைக்குத்தான் அழைத்து வந்தார்.

குயில் கூவிற்று. அக்காக் குருவி கத்திற்று. நீ-சோவ் என்றும் ஒரு குருவி

கத்திற்று. காவேரி முழுவதும் வெள்ளம் மோதி மோதி பெரிய பாம்பு மூச்சு

விடுகிறதைப் போல நகர்ந்த்து. யானை நகர்ந்து கொடுப்பதைப் போலிருந்த்து.

மிரண்டு கரையிலேயே நின்ற குழந்தையைக் கையைப் பிடித்து முழங்கால்

தண்ணீரில் நிறுத்திக் குளிப்பாட்டி விட்டார் அப்பா. பிறகு வேட்டியைத்

துவைத்துக் கொடுத்தார்.கௌபீனத்தைக் கசக்கிக் கொடுத்தார். தலையில்

அம்மா கட்டிவிட்ட எஸ் கட்டு கலையாமலேயே குளித்துவிட்டு உஹூ,

உஹூ, உஹூ என்று உதடு நடுங்க, கையிரண்டும் கூப்ப , சில்லிப்பில் சிலிர்த்துக் கொண்டே, நிர்வாணமாக, மீன்குத்தி ஒன்று தண்ணீருக்குள் செங்குத்தாகப் பாய்ந்து முழுகிச் சிலிர்ப்பதைப் பார்த்துக் கொண்டே நின்றான்

அவன்.. சிலுப்பிவிட்டு, , அலகில் எதையோ கவ்விக் கொண்டு, நீர் மட்டத்திற்கு மேலேயே, தவளைக்கல் வீசினாற் போல, தொட்டும், தொடாத்து

மாக பறந்து கோயிற்று மீன்குத்தி சடப்’—

அப்பா ஈரவேட்டியை உதறி இந்தா என்று கட்டிக் கொள்ளக் கொடுத்தார்.

விபூதியைக் குழைத்து நெற்றியில் இட்டார்., கையில் இட்டார். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்கட்டு வித்தை போல,வானத்தில் நட்சத்திரம்

முளைப்பது போல, ஈரம் உலர்ந்து விபூதி பளிச்சிட்ட வெண்மை!எல்லாம் அந்த விபூதியைப் போலவே நினைவில் பட்டையடித்துத் தெரிகிறது---அன்று

பிற்பகல் சாப்பிட்டுவிட்டு அப்பா ஊருக்குக் கிளம்பியதும் ஞாபகம் இருக்கிறது.

(அம்மா வந்தாள்---தி.ஜானகிராமன்)

2 comments:

 1. காலையின் இயற்கை அழகை சொன்னவிதம் ரொம்ப அழகுதான்.

  ReplyDelete
 2. இந்த மாதிரி வர்ணனைகளுக்காகவே பல முறை
  படித்திருக்கிறேன்.இவரது கும்பகோணம் தெருக்கள் விவரிப்பைப் படித்துவிட்டு பிரபலமான எழுத்தாளர்களே அந்த ஊருக்குச் சென்று வீடுகளத்
  தேடினார்கள் என்று படித்திருக்கிறேன்.தேவனது
  எழுத்துக்களும் இந்த மாதிரிதான்.
  நன்றி அம்மா

  ReplyDelete