Pages

Saturday, December 10, 2011

காவேரி தீரம்---2


வெகு காலமாக ஓர் ஆசை; சின்னப் பையனாக இருந்த போதே முளைத்த ஆசை யாரும் இல்லாத ஒரு காடு; பரந்த காடு; புலி, கரடி இல்லாத காடு. அங்கே, நாணலும் புல்லும் வேய்ந்த குடிசை. அதன் வாசலில் ஓர் ஆறு ஆற்றின் இரு பக்கமும் ஆலும் அரசும் நாவலும் வாகையும் நெடியனவாக நிற்கின்றன. ஆற்று நீர் மந்தமாக நகர்கிறது. சூரியன் மரங்களின் இடுக்கு வழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக் கொண்டிருக்கிறான். ஆற்று நீரில் கணுக்காலளவில் நின்று இரண்டு கைகளையும் சேர்த்து, நீரை அள்ளி அர்க்கியமாக விழவிடுகிறேன். ஐயோ! ஐயோ! என்ன சாந்தி! என்ன சாந்தி என்னுள்ளே நிரம்பி வழிகிறது! பெரிய இன்பம் வேண்டும் என்று ஆசைப்படும் போதெல்லாம இந்தக் காட்சி தான் என்முன் நிற்கிற வழக்கம். ஆனந்தத்தின் எல்லையாக இது என் உள்ளே பொருள் கொண்டு நிற்கும். என்றோ ஒரு நாள் நான் இப்படி நிற்கப்போகிறேன். சாசுவதமாக நிற்கப் போகிறேன் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. பள்ளிக்கூடம் இராது, வீடு இராது, வேலை இராது, அப்போது.

இப்போது அந்த ஆனந்தமே கைக்கு எட்டிவிட்டாற்போல் இருந்தது. அந்தக் காலத்திலிருந்து நிலைத்துவிட்ட கனவுதான் நனவாகிவிட்டதா? அதே காட்சியின் நடுவே நின்று கொண்டிருக்கிறேன். காவிரி அரை மைல் அகலத்துக்குப் பரந்து நகர்கிறது. முக்கால் ஆற்றின் வெள்ளம். நான் இந்த ஓரத்தில், மணலாக இருந்த பகுதியில் நிற்கிறேன். இக்கரையிலும் அக்கரையிலும் வாழைத் தோப்புகள். அப்பால் வானையளக்கும் சவுக்கைக் காடு. குடிசைக்குப் பதில் ஒரு சின்னக் கோயில். இக்கரையில் எனக்குப் பின்னால் நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே மௌனம். நீர் தனக்குத்தானே மோதி ஓடுகிற சலசலப்பைத் தவிர, ஓர் ஓசை இல்லை. அக்கரை அரை மைல் தூரம். அங்கே தோப்பில் பாடும் பறவை ஒலிகூடக் காதில் விழாமல் அந்த மோனத்தில் அடங்கி விடுகிறது.

நான் தன்னந் தனியாக நிற்கிறேன். குளிக்கக்கூட மனம் இல்லை. சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்து மணல்மீது உட்கார்ந்தேன். இரண்டு மூன்று நாளாகவே மழை பெய்து காற்று குளிர்ந்து விட்டிருந்தது. இன்று இரவுகூடப் பெய்யப் போகிறோம் என்று சொல்வதுபோல் வான் நீலத்தில் பொதி பொதியாக அங்கும் இங்கும் திரண்டு நின்ற மேகங்களுக்குள் சூரியன் மறைந்தான். வெயில் மேலே பட்டதும் படாததுமாக விழுகிறது. சூடு இல்லாத வெயில். காலேஜிலிருந்து வெளியே வந்தபிறகு இப்படி உட்காரும் அநுபவமே அற்றுப்போய்விட்டது. அதனால்தான் குளிக்ககூட மனம் இல்லாமல் ஓடும் நீரில் ஆவியைக் கொடுத்து உட்கார்ந்து கிடக்கிறேன். ஒரு நிறைந்த சூனியம். நடு நடுவே தனிமையின் நினைவும் வருகிறது.

மணி ஒன்பதுக்குமேல் இருக்கும். ஊர்க்காரர்கள் விடிய விடிய வந்து குளித்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படியா நிர்ஜனமாக இருக்கும்? பட்டணத்தில் வெறும் கடலைத்தான் பார்க்கலாம். நீரின் சீற்றத்தைத்தான் பார்க்கலாம். இங்கே பரந்த நீர், பசுமை, சோலை, நிசப்தம் எல்லாவற்றிலும் தோய்ந்து கிடக்கமுடிகிறது.

5 comments:

  1. காவேரிக்கரைக்கே வந்து அங்கு உக்காந்திருப்பதுபோல இருக்கு எழுத்துக்கு அவ்வளவு சக்தி.

    ReplyDelete
  2. உங்கள் தாமிரபரணி, அகண்டகாவேரி அளவுக்கு
    பிரம்மாண்டமாக எந்த இடத்திலாவது இருக்கிறதா?
    இல்லை என்றே நினைக்கிறேன்.என்றாலும் ஜீவநதி
    யாயிற்றே.இளமையில் அதை அநுபவித்த நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான்.தக்குடு
    பதிவிடும் கல்லிடைக் காட்சிகள் அருமையாக இருக்குமே.நன்றி அம்மா

    ReplyDelete
  3. தாமிர பரணி அகண்டகாவேரி அள்ளவுக்கு பிரும்மாண்டம் இல்லதான். ஆனாலும் நீங்க சொல்வதுபோல ஜீவ நதி தான். தக்குடு அளவுக்கு
    நம்மால ல்லாம் எழுதமுடியுமா?

    ReplyDelete
  4. ‘’பட்டணத்தில் வெறும் கடலைத்தான் பார்க்கலாம். நீரின் சீற்றத்தைத்தான் பார்க்கலாம். இங்கே பரந்த நீர், பசுமை, சோலை, நிசப்தம் எல்லாவற்றிலும் தோய்ந்து கிடக்கமுடிகிறது’’.
    கிராமங்களில் கண்மாயை பார்க்கும் போது நானும் தி.ஜானகிராமன் சொல்வது சரியென்றுதான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. நீங்கள் மதுரை வெறியராக இருப்பது போல் தி.ஜா.வும் ,கும்பகோணம்,காவேரி வெறியர்
    அவர் எழுத்தைப் படித்துவிட்டு,காவேரியில் அவர்
    குறிப்பிடும் இடங்களைத் தேடிப் பார்க்க வேண்டும்
    என்ற பேரவாவை உள்ளத்தில் எழுப்பி விடுவார்.
    அதுதானே நல்ல எழுத்தின் மகிமை வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி சித்திரை.

    ReplyDelete